இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கின்றேன் படித்து முடித்த பின் இதைப் பற்றி எழுதுகிறேன். இந்த புத்தகம் நைஜீரியாவில் நடந்த பைஃபாரா உள்நாட்டு யுத்தம் பற்றியது. மிகவும் அருமையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இதன் ஆசிரியர் சிம்மமாடா இங்கோசி அடிச்சிப் ப்ற்றி சில...........
சிமமண்டா அடிச்சி புகழ்பெற்ற நைஜீரிய எழுத்தாளர். நைஜீரியாவின் எனுகு(Enugu) எனும் ஊரில் பிறந்த இவர், தனது 19-ஆம் வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு மருத்துவ படிப்பையும், ஊடக மற்றும் அரசியலியல் துறையையும் கற்றார். தற்போது யேல் பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்கா சம்பந்தமான மேற்படிப்பை மேற்கொண்டு வருகிறார். அவரது முதல் நாவலான Purple Hibiscus, காமன்வெல்த் எழுத்தாளர் விருதை பெற்றுத் தந்தது. அவரது இரண்டாம் நாவலான “Half of a Yellow Sun” புகழ்பெற்ற புனைவிற்கான ஆரஞ்சு விருதை பெற்றுத் தந்தது. இவரது சிறுகதை தொகுப்பும் மிகப் பிரபலமானது.
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தன்னுடைய ‘உலகத்துக்கு எழுதிய கடிதம்’ கட்டுரையில் சிமமண்டாவைக் குறித்து எழுதும் பகுதிகள்:
ரொறொன்ரோவில் சர்வதேச எழுத்தாளர் மாநாடுகள் அடிக்கடி நடக்கும். ஒரு கூட்டத்துக்கு போனபோது சபையிலே எண்பது வீதம் பெண்களாகவே இருந்தார்கள். மேடையைப் பார்த்தால், ஒன்றிரண்டு ஆண் எழுத்தாளர்களைத் தவிர மீதி எல்லாமே பெண்கள். ஓர் அமர்வில் நோபல் பரிசு பெற்ற வோலே சோயிங்கா வாசித்தார். இன்னொன்றில் புலிட்சர் பரிசு பெற்ற எட்வர்ட் ஜோன்ஸ் ஒரு சிறுகதை படித்தார். நைஜீரியாவிலிருந்து வந்திருந்த இளம்பெண் சிமமண்டா Half of a Yellow Sun என்ற அவருடைய நாவலின் முதலாவது அத்தியாயத்தை வாசித்தார். அவருடைய தன்னம்பிக்கையும், வாசிப்பும், கதை சொன்ன பாங்கும் சபையோரை கவர்ந்தது. வாசிப்பு முடிந்ததும் புத்தகத்தை வாங்கிக்கொண்டு பலர் அவருடைய கையெழுத்துக்காக நீண்ட வரிசையில் நின்றார்கள். பெண்களுடைய எண்ணிக்கை சபையிலே எக்கச்சக்கமாக இருந்ததன் காரணம் எனக்கு அப்போது புரிந்தது.
சிமமண்டாவின் எழுத்திலே திடீர் திருப்பமோ, அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய விழையும் ஆர்வமோ பெரிதாக இருக்காது. ஆனால் மிக அமைதியான நடையில் எழுதிக்கொண்டே போவார். ஒரு வரியை படித்தால் அடுத்த வரியையும் படிக்கத் தூண்டும் எழுத்து. இவருடைய சிறுகதை ஒன்றை நான் படித்திருந்தேன். அந்தச் சிறுகதையை அவர் இரண்டு வருடங்களாக எழுதியதாகச் சொன்னார். ‘இரண்டு வருடங்களா? ஒரு சிறுகதைக்கா?’ என்றேன். சிறுகதையை எழுதும்போது அதை ஒரு முடிவை நோக்கிச் செலுத்தினேன். பின்னர் படித்துப் பார்த்தபோது பலவந்தமாக ஒரு திசையில் அதை தள்ளிக்கொண்டு போனது தெரிந்தது; இயற்கையாகவே இல்லை. மீண்டும் தொடக்கத்தில் இருந்து புதிதாக எழுதவேண்டி வந்தது என்றார். ஒரு சிறுகதை கேட்டதும் பத்து தாள்களுடன் அறைக்குள் போய் பூட்டிக்கொண்டு மூன்று மணி நேரத்தில் சிறுகதையோடு வெளியே வரும் எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். நான் வியப்படைந்ததற்கு காரணம் அதுதான்.
அவரிடம் உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார் என்று கேட்டதும் அவர் தந்த பதில் ஆச்சரியமாக இருந்தது. ரொமேஷ் குணசேகெரா என்றார். அவர் பெயரை கேள்விப்பட்டிருந்தேனே ஒழிய அவரைப் படித்ததில்லை. ஓர் இலங்கை எழுத்தாளரைப்பற்றி நைஜீரியப் பெண் கனடாவில் வைத்து என்னிடம் கூறியது அபூர்வமான விடயம்தான். ஒருவருடைய எழுத்து தரமானதா என்பதைக் கண்டுபிடிக்க எழுத்தாளருடைய ஒரு வசனத்தைப் படித்தாலே போதும். வார்த்தைகளை எப்படி தெரிவு செய்கிறார், எப்படி அடுக்குகிறார், வசனங்களை செதுக்கி எப்படி உருவம் கொடுக்கிறார் என்பதைப் பார்ப்பதே முக்கியம் என்றார்.
சிமமண்டாவுக்கு 29 வயதாகிறது. இரண்டு நாவல்களும் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். இவருடைய முதலாவது நாவலின் பெயர் Purple Hibiscus. இரண்டாவது நாவல்தான் Half of a Yellow Sun. 1960களில் நைஜீரியாவின் ஒரு பகுதியான Biafra பிரிந்து தனி நாடாக பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து உள்நாட்டு போர் மூள்கிறது. அந்தக் காலகட்டத்தின் பின்னணியில் கதை சொல்லப்படுகிறது. ஒரு பேராசிரியர், அவருடைய காதலி ஒலானா, அவர்கள் வேலைக்காரன் உக்வு, இவர்களே பிரதான கதை மாந்தர்கள். போர் எப்படி அறிவு ஜீவிகளையும், சாதாரண ஏழை மக்களையும் ஒரே மாதிரி பாதிக்கிறது என்பதையும், அதனால் ஏற்படும் அவலங்களையும், கொடூரங்களையும் பாத்திரங்களின் சம்பாசணை ஊடாக மெள்ள மெள்ள வெளிப்படுத்துகிறது நாவல். கைனானி என்று ஒரு பெண், ஒலானாவின் இரட்டைச் சகோதரி, அவள் பேசும்போது நறுக்காகவும் கெறுக்காவும் இருக்கும். அற்புதமான அவருடைய குணாதியம் நூல்கண்டில் சுழல் சுழலாக நூல் பிரிவதுபோல வெளிப்படும். நாவலின் இடையிலே வந்து இடையிலே மறைந்துவிடும் அந்தப் பாத்திரம் மனதை விட்டு அகலுவதில்லை.
நாவலை விமர்சகர்கள் புகழ்கிறார்கள். பல விருதுகளும், பரிசுகளும் சிமமண்டாவைத் தேடி வருகின்றன. அடுத்த சினுவ ஆச்சிபி என்று இவரை சிலர் சொல்கிறார்கள். எனக்கு என்னவோ இவரை புக்கர் பரிசு பெற்ற நைஜீரிய எழுத்தாளர் பென் ஒக்ரியுடன் ஒப்பிடவே தோன்றுகிறது. இவரால் ஒரு மோசமான வசனம்கூட எழுதமுடியாது. இவருடைய வசனத்துக்கு ஒரேயொரு உதாரணம். ‘அவள் குருவி கொத்துவதுபோல நிறுத்தி நிறுத்தி பேசினாள்.’ என்ன காட்சி வடிவமான, நுட்பமான வசனம். அவருடைய புத்தகத்துக்கு கொடுத்த காசு அந்த ஒரு வசனத்துக்கே சரியாய் போய்விட்டது.
எதற்காக எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு அவருடைய பதில்:
‘நான் எழுதுகிறேன். நான் எழுத வேண்டும். எழுதாமல் இருக்க என்னால் முடியாது. சிலவேளைகளில் எழுத்து என்னிலும் பெரிதாக இருக்கிறது.’