Saturday, July 26, 2008

போன்ஸாய் பழங்கள்



நேற்று ஒரு செய்தி படித்தேன், சந்திரசேகர் என்னும் 17 வயது சிறுவன்(!) சென்னை IITயில் M.Tech பட்டம் பெற்றிருக்கிறான். 2 வருடங்களுக்கு முன்னால் 15 வயதில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறான். பையனின் மேதமையை அறிந்த குடும்ப நண்பரால் 11 வயதில் Microsoft Certified Engineer மற்றும் CISCO வில் Associate பெற்றான் இதை தவிர அந்த வயதில் Technology Information Forecasting and Assessment Council Center of Relevance and Excellence in network engineeringல் இயக்குனர் பட்டம். எல்லாம் சரி இந்த மேதாவிலாஸமெல்லாம் இயற்கையிலேயே சரியா. அந்த சிறுவன் சிறு வயதிலேயே தன் குழந்தைதன்மையை இழந்துவிட்டதாக எனக்கு படுகிறது. இந்த காலங்களில் குழந்தைகளின் மண்டைக்குள் நிறைய திணிக்கிறோம். என் மகனை பள்ளியில் LKG சேர்க்க அந்த மூன்று வயது குழந்தைக்கு தெரிந்திருக்க வேண்டியது என்ன தெரியுமா ஆங்கிலத்தில் பெரிய A-Z, சிறிய a-z அதுவும் சேர்த்து சாய்த்து எழத வேண்டும்(Cursive Writing)., கணித்தில் 0-100, இது தவிர இந்தி வேறு. எனக்கு இந்தி சுத்தமாக வராது. இன்னும் கொஞ்சம் காலம் முன்னால் பிறந்திருந்தால் திராவிட கட்சிகளுடன் சேர்ந்து இந்தி எழத்துக்களுக்கு தார் பூசியிருப்பேன். சரி இதை விட கொடுமை என்னவென்றால் குழந்தைகள் நுழைவு தேர்வு எழத தயார் செய்ய ஒரு பள்ளியிருக்கிறது. அதில் ஒன்றாரை வயது குழந்தை பாடம் படிக்க வருகிறது. தவழ ஆரம்பித்தவுடன் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள்(என்னையும் சேர்த்துதான் வேறுவழி! பள்ளியில் இடம் கிடைக்க வேண்டுமே). இதை தவிர பள்ளிகள் விடுமுறை விட்டிருக்கும் போது கூட குழந்தைகளை கோடை பயிற்சி மையங்களுக்கு அனுப்பி படிக்க செய்கிறோம். இதற்கெல்லாம் காரணம் என்னவென்று யோசித்தால் நமது பேராசைகளுக்காக அல்லது சமுதாய கட்டாயத்திற்க்காக நம் குழந்தைகளின் குழந்தை பருவத்தை பலிகொடுக்கிறோம் (கொடுக்கிறோமா அல்லது வாங்குகிறோமா தெரியவில்லை). இது நியாயமா!.
ஆண்டாள் நோன்பிருந்து திருப்பாவை பாடியபோது அவளுக்கு வயது ஐந்தாம். மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தினமாலையில் ஒரு பாடல்

அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்க்கும் தன்மையளாய் –பிஞ்சாய்
பழத்தாளை ஆண்டாளை பத்தியுடன் நாளும்
வாழ்த்தாய் மனமே மகிழ்ந்து.

எல்லாக் குழந்தைகளும் பிஞ்சிலேயே பழத்தால் என்னவாகும் போன்ஸாய் மரங்களைப் போல் போன்ஸாய் பழங்களையா உருவாக்குகிறோம் என்று யோசிக்க வேண்டாமா! எனினும் சந்திரசேகருக்கு என் வாழ்த்துக்கள்.

Tuesday, July 22, 2008

ஒரு நாயின் கதை


ஒரு நாள் கடைக்கு நாய் ஒன்று வந்தது. முதலில் கடைகாரர் அந்த நாயை விரட்டினார் பிறகு அதன் வாயில் ஒரு சீட்டை பார்த்தார் அதில் “நாயின் கழத்து பட்டையில் 100ரூபாய் உள்ளது அதை வைத்துக் கொண்டு 12 சோப்பும் 1 ஷாம்பூவையும் கொடுத்து உதவுங்கள்” என்றிருந்தது. கடைக்காரரும் சீட்டில் உள்ளதையும் மீதி சில்லரையையும் பையில் போட்டு கொடுத்தார். நாயும் கவ்விக் கொண்டு சென்றது. கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை, கடையை மூடிக்கொண்டு நாயின் பின்னலேயே சென்றார். நாய் ஒரு வீட்டின் முன் நின்றது காலால் கதவை தள்ளி பார்த்து, கதவு திறக்கவில்லை. பிறகு கதவை தன் தலையால் முட்டிவிட்டு காத்திருந்தது. சத்தம் கேட்டு நாயின் எஜமானன் வந்தான். நாயை முறைத்து பார்த்துவிட்டு அதை அடிக்க ஆரம்பித்தான். கடைக்காரருக்கு பயங்கர கோபம் , எஜமானனிடம் சென்று “இவ்வளவு அறிவார்ந்த நாயை போய் அடிக்கின்றீர்களே” என்று கேட்டார். அதற்கு அந்த எஜமானன் “இந்த அறிவுகெட்ட நாய் சாவியை மறந்து விட்டு சென்றிருக்கிறது, இந்த மாதம் மூன்றாவது முறையாக இதை செய்கிறது” என்றான்
கதையின் நீதீ: மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!

Monday, July 21, 2008

வீர வைணவர்கள்



கி.பி 1311 டில்லியை ஆண்டுகொண்டிருந்த முகலாய மன்னன் அலாவுதின் கில்ஜி மாலிக் கஃபூர் தலைமயில் ஒரு படையை அனுப்பினான், பாண்டிய நாட்டை ஆக்ரமிப்பதற்காக. வந்த படை பாண்டிய நாட்டை துவம்சம் செய்தது. மீண்டும் ஏழாண்டுகள் கழித்து கி.பி1318 ல் வந்த முகலாய படை பாண்டிய நாட்டை சூரையாடியது. மீண்டும் ஐந்தாண்டுகள் கழித்து கி.பி 1323 வந்த படையை தலைமை தாங்கி நடத்தி வந்தது உலூப் கான்.( இவன் பின்னாளில் முகமது பின் துக்ளக் என்னும் பெயரில் டில்லியில் அரசாண்டான்) இந்த படையின் நோக்கம் திருவரங்கத்தை துவம்சம் செய்வது, கோயிலில் இருக்கும் மூலவர் மற்றும் உற்சவ விக்ரகங்களை சிதைப்பது. இந்த படை தற்போது திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரத்தில் முகாமிட்டிருந்தது. மறு நாள் திருவரங்கத்தை முற்றுகையிட திட்டம். அப்போது திருவரங்கத்தில் நம்பெருமாளுக்கு உற்சவம் நடந்து கொண்டிருந்தது. முற்றுகை திட்டம் திருவரங்கத்தில் உள்ள வைணவ பெரியவர்களுக்கு தெரிந்தது. இருப்பது ஒரு இரவு அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும். பிள்ளைலோகாச்சாரியர், தேசிகர், சுதர்சன பட்டர் தலைமயில் கூட்டம் கூட்டப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது, அதன்படி பிள்ளைலோகாசாரியர் தலைமயில் ஒரு குழு மூலவருக்கு முன்னால் கல்லால் கட்டடம் எழப்பிவிட்டு உற்சவ விக்ரகத்தை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி செல்ல வேண்டும், சுதர்சன பட்டர் தலைமயிலான குழு வடக்கில் சென்று முகலாய படையை தடுத்து நிறுத்தி நேரம் பெற்று தர வேண்டும், தேசிகர் ஓலைசுவடிகளையும் சுதர்சன பட்டரின் இரு புதல்வர்களையும் காப்பாற்ற வேண்டும்.
சுதர்சன பட்டர் தலைமயில் 12,000 வைணவர்கள் திருவரங்கத்தின் வடக்கே சென்று காவல் காத்தனர். பிள்ளைலோகாசாரியர் மூலவருக்கு கல்திரை சமர்ப்பித்துவிட்டு உற்சவ மூர்த்தியை ஒரு பல்லக்கில் வைத்து தெற்க்கு நோக்கி பயணித்தார். முகலாய படையெடுப்பில் அன்று திருவரங்கத்தை காக்கும் பொருட்டு சுதர்சன பட்டர் உட்பட 12,000 வைணவர்கள் கொல்லப்பட்டனர். பிள்ளைலோகாசாரியர் உற்சவ மூர்த்தியை எடுத்து செல்கையில் ஜோதிஷ்குடி என்னும் ஊரில் தன் இன்னுயிர் நீத்தார் அப்போது அவருக்கு வயது 118 . தேசிகர் அரும்பாடுபட்டு ஓலை சுவடிகளையும் சுதர்சன பட்டரின் இரு புதல்வர்களையும் காப்பாற்றினார். உற்சவ மூர்த்தி திருமாலிருஞ்சோலை வழியாக குமுளி, இன்றைய காலிக்கட் சென்று மேலக்கோட்டையில் சிறிது காலம் இருந்துவிட்டு திருமலையில் தஞ்சம் அடைந்தார். பிறகு 57 ஆண்டுகளுக்கு பிறகு கி.பி 1370ல் மீண்டும் திருவரங்கம் வந்தடைந்தார். அந்த 57 ஆண்டுகள் வைணவ சம்பிரதாயத்தின் இருண்ட காலம். வைணவர்களின் தலைநகராக கருதப்படும் திருவரங்கத்தை காப்பாற்றி கொடுத்த 12,000 வைணவர்களும் வீர வைணவர்கள்தானே!.

Saturday, July 19, 2008

கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜம்


திருவல்லிகேணி ஹனுமந்த ராயன் தெருவில் வசித்த என் நண்பனின் பக்கத்து வீடுதான் கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜத்தின் வீடு. அவருடைய பேரன்களுடன் நான் கிரிகெட் விளையாடியிருக்கிறேன். அவர் கணிதத்திற்காக எத்தனையோ செய்திருக்கிறார். அவரது மேதாவிலாஸத்திற்கு அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சிறு நிகழ்ச்சி.
அவர் இங்கிலாந்தில் நோயுற்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார். அவரை பார்க்க, ராமானுஜத்தை இங்கிலாந்திற்கு அழைத்து வந்த இன்னொரு கணித மேதையான ஹார்டி(கம்பருக்கு சடையப்ப வள்ளல் போல் ராமனுஜத்திற்கு இவர்) வருகிறார்.
ஆஸ்பத்திரியில் ஒரு நோயாளியை பார்க்க போனால் நாம் என்ன செய்வோம்? நலம் விசாரிப்போம். ஹார்டி என்ன செய்த்தார் தெரியுமா, ராமானுஜத்தை பார்த்த உடனேயே, “ நான் ஒரு டாக்சியில் வந்தேன் அந்த டாக்சியின் நம்பர் 1729 , எனக்கு ஏனோ அந்த நம்பர் பிடிக்கவில்லை” என்று கூறுகிறார்! என்ன ஒரு அற்புதமான நலம் விசாரிப்பு! அத்ற்கு நாமாக இருந்தால் ,” போயா நீயும் உன் டாக்சி நம்பரும். இங்க ஊசிபோட்டு கையெல்லாம் வீங்கி கிடக்கு என்கிற ரீதியில் ஏதாவது சொல்வோம்.
ஆனால் ராமானுஜம் உடனே , உடனே என்றால் உடனே- “ ஏன் ஹார்டி அப்படி சொல்கிறீர்கள்? அது ஒரு அற்புதமான எண். It is that smallest number which can be presented in two different ways as addition of two cubes : ( 10 to-the-power 3 + 9 to-the-power 3 ) and ( 12 to-the-power 3 + 1 to-the-power 3 ).” என்று கூறினாராம்.
ராமானுஜம் 33 வருடங்களே இவ்வுலகில் வாழ்ந்தார், அவர் கணிததிற்கு செய்திருப்பது ஏராளம். theory of numbers, theory of division ( partition ) and the theory of continuous fractions, இன்னும் பல சூத்திர்ங்களை நமக்கு அளித்துள்ளார். அவர் விட்டு சென்ற குறிப்புகளை இன்றும் ஆராய்சி செய்கிறார்களாம். உலகமே போற்றும் ஒருவர் வாழ்ந்த ஊரில் நான் வாழ்ந்திருக்கிறேன் என்று மிகவும் பெருமை அடைகிறேன்.

Friday, July 18, 2008

ஜென்


ஜென் தத்துவங்களை கடைபிடிக்க எண்ணி பல முறை தோற்றிருக்கிறேன். அதை யாராலும் கடைபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஜென் தத்துவம் உன் வாழ்க்கையை இப்போது இந்த நொடி இந்த விநாடி வாழ்ந்து பார் என்பது அப்படியென்றால் சாப்பிடும் போது சாப்பிடு, படிக்கும் போது படி. சாப்பிடும் போது படிக்காதே என்பது தானே. The Zen And The Art Of Motorcycle Reparing என்று ஜென் தத்துவத்தை விளக்கும் ஒரு புத்தகம் கிடைத்தால் படித்து பாருங்கள். ஜென் என்ற ஒரு விஷயத்திற்க்கும் வெற்றிக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு. ஜென் சித்தாந்தம் விளக்க ஒரு சின்ன கதை.
ஒரு ஜென் குரு இருந்தார் அவர் இறக்கும் சமயம் வந்தது. அவர் ஒரு பிரசித்தி பெற்ற குரு என்பதால் நிறைய சிஷ்யர்கள் அவருக்கு இருந்தனர்.சுற்றியிருந்த சிஷ்யர்கள் ஆர்வத்துடன் நின்று கொண்டிருந்தனர், அவர் சாவதற்காக அல்ல ,கடைசி நேரத்தில் ஏதாவது முக்கியமான செய்தி சொல்லமாட்டாரா என்றுதான். அவர் ஒன்றும் சொல்லவில்லை நேரம் சென்று கொண்டுருந்தது ஆனால் உயிர் பிரியவில்லை. வெளியூர் சென்றிறுந்த பிரியமான மாணவன் ஒருவன் குருவின் உயிர் பிரிவதை ஞானதிருஷ்டியால் பார்த்துவிட்டு குருவிற்கு பிடித்த திராட்சை பழத்தை வாங்கிகொண்டு விரைந்து வந்தானாம்.
வந்த சிஷ்யன் குருவை வணங்கிவிட்டு அவருக்கு பழத்தை கொடுத்தானாம். குருவும் அதை வாங்கி சுவைத்து சாப்பிட ஆரம்பித்தார். குழமியிருந்த சிஷ்யர்களுக்கு பொறுமையில்லை, குரு கடைசியாக செய்தியேதும் சொல்லாமல் போய்விடுவாரோ என்பதால்.ஒரு சிஷ்யன் தைரியத்தை வரவழைத்து கொண்டு கேட்டே விட்டான்.
“குருவே, கடைசியாக நீங்கள் எங்களுக்கு ஏதேனும் சொல்லவீர்களா..”
குரு சொன்னாராம்:” திராட்சை இனிப்பாக இருக்கிறது..”
இதுதான் கதை. என்ன தலையும் புரியலை வாலும் புரியலை என்கிறீர்களா. சிந்தித்து பாருங்கள் அதுதான் ஜென்!.

Thursday, July 17, 2008

கைபேசி


ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கும் ஐஃபோன் கடந்த வாரம் பெங்களூரில் மட்டும் பத்து லட்சம் ஃபோன்கள் விற்று தீர்த்ததாம் மேலும் ஆப்பிள் ஸ்டோர்ஸ் என்னும் வலைதளத்திலிருந்து டவுன்லோட் செய்யப்பட்டிருக்கும் அப்ளிகேஷன்கள்(ஃபோன் உபயோக ப்ரொக்ரம்கள்) மட்டும் கடந்த வாரம் மட்டும் ஒரு கோடியை தாண்டிவிட்டதாம். ஆப்பிளின் ஐஃபோன் என்பது கைபேசி மட்டுமல்ல அது ஒரு நடமாடும் கணினி, மீடியா பிளேயர்,இன்டர்நெட் மற்றும் என்னென்னவோ இருக்கிறது.
கைபேசிகளில் புதிய முயற்சி என்பது இன்றியமையாதது, ஆப்பிள் ஐஃபோனின் முயற்சிக்கு முன்பே லினிக்ஸ் தளத்தில் இயங்கும் கைபேசிகளின் முயற்சிகளளை ஆரம்பித்து விட்டது நோக்கியா. இதனால் என்ன பயனென்றால் லினிக்ஸ் ஒரு திறந்த பெட்டகம் அதாலால் கைபேசிகளில் புதிய அப்ளிகேஷன்கள் உலகத்திற்கு வரும்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நோக்கியா ஃபோன்கள் வருடத்திற்கு 1.2 பில்லியன்களாம், மொத்த உலக சந்தை 1.5 பில்லியன்கள். இது இன்னும் ஐந்து வருடங்களில் ஏழ பில்லியன்களாகும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ம் உலகம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு.

பங்கு சந்தை



மும்பை பங்கு சந்தையில் கரடி புகுந்து விளையாடியிருக்கிறது, நேற்று 654 புள்ளிகள் குறைந்து சென்சக்ஸ்12,636 புள்ளிகளில் இருந்தது. இது கடந்த 15 மாதங்களில் மிக குறைவாம். இந்த சரிவால் முதளீடாளற்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு 1.8 லட்ச கோடிகளாம். இதனால் பண வீக்கம் அதிகமாகலாம் இதனால் வங்கிகளில் வரி விகிதம் உயர்த்தபடலாம் என்று கூறப்படுகிறது. இதனால் நான் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டு கடனின் தவணை உயர்த்தப்படலாம் அல்லது கட்டும் கால அளவு நீட்டிக்கபடலாம்.
போகட்டும் இதற்கு காரணமாக கூறப்படுவது ஜூலை 22ல் உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான ஓட்டெடுப்பு. இதற்கு காரணம் கம்யூனிஸ்ட் இடதுசாரிகள் காங்கிரஸ் அரசுக்கு தன் ஆதரவை விலக்கி கொண்டது இதற்கு காரணம் மன்மோகன் சிங் நியூக் எனப்படும் அணு ஒப்பந்தத்தில் தீவிரம் காட்டுவது இதற்கு காரணம் அமெரிக்க அதிபர் புஷ் தன் காலத்திலேயே அந்த ஒப்பந்தம் நிறைவேற வேண்டும் என நினைப்பது.
புஷின் நினைப்பு என் கடனின் தவணையை உயர்த்துகிறதல்லவா இதுதான் கேயாஸ் தியரி அல்லது பட்டர்ஃபிளை எஃபக்ட்.