Monday, August 11, 2008

அது ஒரு கனா காலம்!




லயோலா கல்லூரி எங்கள் குடும்ப கல்லூரி.என் அண்ணண் என் ஒன்று விட்ட அண்ணண்கள்(என் சித்தப்பா பசங்கள் மூவர்) பிறகு நான் எல்லோரும் லயோலைட்ஸ். இதில் ஒரு அண்ணண் தவிர மீதி அனைவரும் கணிதம் தான் படித்தோம்.
லயோலா என்னும் பெயர் புனிதர் இக்னீஷியஸின் குடும்ப பெயர். 1491ல் ஸ்பெயினில் பிறந்த இக்னீஷியஸ் அரசரின் பாதுகாவலராக பணிபுரிந்தார். ஒரு போரில் அடிபட்டு எதிரி சிறையில் இருந்த போது யேசுவிடம் ஞானம் ஏற்பட்டு `The Spiritual Exercises' என்னும் புத்தகத்தை எழதினார். புனிதர் ஃபாரான்ஸிஸ் சேவியருடன் 1540 இந்தியா வந்து யேசுவின் சமூகம் என்னும் ஒரு நிறுவனத்தை எற்படுத்தி யேசுவை பற்றி போதித்தார். இதுவே படிப்படியாக முன்னேறி பள்ளிகள் கல்லூரிகள் கட்ட ஏதுவாகியது. சென்னை லயோலா கல்லூரி கடந்த 15 வருடமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி பிரிவில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது.

கல்லூரி சார்ந்த தமிழ் படங்களில் முக்கால்வாசி படங்களில் லயோலா கல்லூரியில்தான் எடுக்கப்படுகிறது. சரத்குமார்,விஜய், சுர்யா, விக்ரம்,விஷால்,ஜெயம் ரவி போன்ற எண்ணற்ற தமிழ் சினிமா உலகின் வைரங்களை பட்டை தீட்டியது லயோலா கல்லூரிதான்.
நான் கல்லூரிக்கு அடியெடுத்து வைக்கும்போது ஏழாவது எட்டாவது படிக்கும் ஸ்கூல் பையன் போல் இருப்பேன் தவிர வெளி உலக அனுபவம் வேறு குறைச்சல். ஆதலால் முதல் ஒரு மாதம் வரை சிந்தாதரி பேட்டையில் உள்ள என் அண்ணண் வீட்டிற்கு சென்று (அப்போது அவன் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்த கல்லூரி தாதா). அங்கிருந்து அவனுடன் காலேஜ் செல்வேன் ராகிங்கிற்கு பயந்து.
முதல் ஆண்டில் முதல் நாள் என்னை டஸ்டர், சாக்பீஸ் மற்றும் அட்டண்டன்ஸ் ரிஜிஸ்ட்ர் எடுத்து வர சொன்னார் ஒரு விரிவுரையாளர் அன்றிலிருந்து அந்த பணி எனக்கிடப்பட்டு படிப்படியாக Class Monitor (இது அந்த மானங்கெட்ட மானிட்டர் அல்ல) ஆனேன். பல பேருக்கு proxy போட்டு Condonation Feeயிலிருந்து காப்பாற்றியிருக்கிறேன். Proxy போடுவதால் தினமும் சமோசா, டீ என்று காண்டினில் ஏக உபசாரம் நடக்கும்.இரண்டாமாண்டு படிக்கும் போது காலை உடைத்துக் கொண்டு 6 மாதம் கல்லூரிக்கே செல்லவில்லை. நான் காலேஜ் படிக்கும் காலத்தில் ஒரு புத்தகம் கூட விலை கொடுத்து வாங்கியது கிடையாது இதில் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களும் அடக்கம். ரஜஸ்தான் புத்தக வங்கி மற்றும் கல்லூரி நூலகத்திலிருந்து தான் புத்தகங்கள் எடுத்து படித்திருக்கிறேன்.
நான் என் டிப்பார்ட்மெண்டிற்காக கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன், மேலும் எங்கள் கல்லூரி கலாசார விழா மிகவும் பிரசித்தி அதன் Organizing Commiteயில் இருந்தேன். காலேஜ் கட் அடித்துவிட்டு சினிமா போயிருக்கிறேன், ஊர் சுற்றியிருக்கிறேன்…

அது ஒரு கனா காலம்!

Tuesday, August 5, 2008

அதிகாரமும் பொறுப்பும்



“The Incredibles” என்னும் கார்ட்டூன் படத்தில் ஒரு காட்சி திருமதி இன்கிரெடிபிள் தன் கணவனை தேடி செல்கையில் தனது மகன் டாஷ் மகள் வயலடையும் ஒரு குகையில் விட்டு செல்கிறாள். நல்ல அம்மாவாக வயலட்டிடம் பாதுகாப்பாக இருக்கும்படியும் டாஷை பார்த்து கொள்ளும் பொறுப்பையும் கொடுத்துவிட்டு அவளுக்கு எந்த அதிகாரமும் கொடுக்காமல் செல்கிறாள். டாஷ் அம்மா சென்றதும் குகையை சுற்றி பார்க்க கொள்ளிகட்டையுடன் செல்கிறான். வயலட் எவ்வளவு கதறி பார்த்தும் அவள் பேச்சுக்கு மதிப்பில்லை. கடைசியில் எதிரிகளிடம் இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். பிறகு இன்கிரெடிபிள் குடும்பம் தப்பிக்கிறது அது வேறு கதை.
இந்த போக்கை இந்திய நிறுவனங்களிட்ம் அதிகம் பார்கிறேன். அவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு பொறுப்புக்கு ஏற்ற அதிகாரம் கொடுப்பதில்லை. உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் ஒருவர் வியாபார துறைக்கு தலைவர், அவரது பொறுப்பு அவருக்கிடப்பட்ட வியாபார இலக்கை அடைவது. இதற்கு தேவையான அதிகாரம் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் ஆர்டர்களை பரிசீலித்து பார்த்து பொருட்களை அனுப்ப வேண்டும், தன் கீழ் வேலை செய்யும் ஊழியர்களை உற்சாகபடுத்தி, தேவையாதை அளித்து வியாபாரத்தை பெருக்க வேண்டும். இதில் எந்த அதிகாரமுமே அவரிடம் இல்லை. இதனால் முடிவு எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்களிடம் அவப்பெயர் ,அவர் கீழ் வேலை செய்யும் ஊழியர்களிடம் அவமதிப்பு. இதற்கு காரணம் முதளாளிகளின் சந்தேகம், பயம். அதிகாரமில்லை ஆனால் இலக்கை மட்டும் அடைய வேண்டும். இதற்கு மேலைநாடுகளில் NAG Syndrome (No Authority Gauntlet) என்கிறார்கள்.
பொறுப்புக்கேற்ற அதிகாரம் இல்லை என்றால் அதன் விளைவுகள் அவமானம், மனச்சோர்வு, நம்பிக்கையில்லா நிலை, உற்சாகமின்மை மற்றும் எதேதோ, இதனால் நிறுவனங்களில் நல்ல அதிகாரிகள் வேலையை விட்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. இது நிறுவனங்களுக்கு நல்லதா என்று முதளாளிகள் சிந்திக்க வேண்டும்.
“பொறுப்புக்கேற்ற” “அதிகாரம்” இல்லை என்றால் அது “அநீதி”!!!